ஷா ஆலம், செப். 1- தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் (எஸ்.கே.வி.இ.) தெலுக் பாங்லிமா காராங் செல்லும் தடத்தில் இன்று அதிகாலை நான்கு சக்கர இயக்க வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் நான்கு ஆடவர்கள் பரிதாபமாக உயிரிந்தனர்.
அந்த வாகனத்தில் பயணம் செய்த 40 வயதுக்குட்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபோர்டு ரேஞ்சர் நான்கு சக்கர இயக்க வாகனம் மரத்தை மோதியது. இவ்விபத்தில் அந்த வாகனத்தில் பயணித்த
நான்கு பேரும் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் வெளியே தூக்கி எறியப்பட்ட வேளையில் மற்ற மூவரும் வாகனத்தில் சிக்கிக் கொண்டனர் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 2.21 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தெலுக் பாங்லிமா காராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் வாகன இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று அவர் சொன்னார்.


