கோலாலம்பூர், செப். 1- புத்ராஜெயாவிலுள்ள டத்தாரான் மெர்டேக்காவில் நேற்று நடைபெற்ற 2025 தேசிய தினக் கொண்டாட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெறுவதில் பெரும் பங்காற்றிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தங்கள் கடமையை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட அனைத்து பணியாளர்களின் செயல் தனித்துவமிக்கது என்று அவர் வர்ணித்தார்.
இந்த அற்புத தருணத்தை மலேசியர்கள் என்ற முறையில் ஒன்றாக இணைந்து கொண்டாடுவதற்கு வருகை தந்த பொது மக்களுக்கும் தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
அனைவரின் வருகையும் அவர்களின் முழு கடப்பாடும் உண்மையான மலேசியாவின் ஆற்றலைப் பிரதிபலிக்கிறது. இந்த ஆற்றல் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றின் மூலம் உருவானது என்று அவர் கூறினார்.
நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நாட்டின் 68வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா சிறப்பு வருகை புரிந்தனர்.



