ஷா ஆலம், செப். 1- கோல லங்காட், பண்டார் ரிம்பாயுவில் இரண்டு வயதுக் குழந்தையை உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் மழலையர் பள்ளியின் ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரிடமிருந்துகடந்த மாதம் 24ஆம் தேதி இரவு 9.01 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது அக்மால்ரிஸால் ராட்ஸி கூறினார்.
அந்த மழலையர் பள்ளி ஆசிரியை அந்த பெண் குழந்தையிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டது தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து குழந்தையின் தாயார் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.
அந்த ஆசிரியை குழந்தையின் தலையில் தண்ணீர் போத்தால்
தாக்கியுள்ளார். மேலும் வகுப்பறையிலிருந்து குளியலறை வரை குழந்தையின் காலைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளார் என அம்மாது தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்றார் அவர்.
அந்த மழலையர் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனையிட்ட அந்த மாது சக ஆசிரியைகள் சொன்னது போல் சம்பவம் நிகழ்ந்துள்ளதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் குடும்பத்தினருடன் விவாதித்து போலீசில் புகார் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார் என முகமது அக்மால்ரிஸால் தெரிவித்தார்.
ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 38 வயதுடைய அந்த ஆசிரியை பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


