ஜெலுபு, ஆக. 30 - ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட்டில் ஏற்பட்ட பல சிறிய அளவிலான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து தற்போதைய நிலைமையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இந்த பேரிடரால் பொதுமக்கள், குறிப்பாக அப்பகுதியில் உள்ளவர்கள் பீதிடைய வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், எச்சரிக்கையாக இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுவதாக கூறினார்.
பூகம்பம் குறித்து அமைச்சரவையில் நான் நேற்று அறிக்கை தாக்கல் செய்தேன். அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை தலைமை இயக்குநரும் கனிமவள மற்றும் (பூகம்பம்) புவி அறிவியல் துறையின் தலைமை இயக்குநர் என்னிடம் தெரிவித்தார்.
இறைவன் அருளால் சிகாமாட் மற்றும் ஜோகூரில் வசிக்கும் அனைவரின் தயார்நிலை மாநில மற்றும் பேரிடர் தேசிய மேலாண்மைக் குழுவினால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மக்கள் பீதியடைய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பெரிய பேரிடர் எதுவும் ஏற்படாது என்று நம்புகிறேன் என்று ஜாஹிட் கூறினார்.
இன்று இங்கு சுமார் 270 மோட்டார் சைக்கிளோட்டிகள் கலந்து கொண்ட 'கெம்பாரா மெர்டேக்கா நெகிரி செம்பிலான்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.
சிகாமட்டில் இன்று காலை 7.29 மணிக்கு ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவான லேசான பூகம்பம் மீண்டும் ஏற்பட்டது. கடந்த எட்டு நாட்களில் மாவட்டத்தில் ஏற்பட்ட ஐந்தாவது நில நடுக்கம் இதுவாகும்.
இந்த நிலநடுக்கம் 2.5 டிகிரி வடக்கு மற்றும் 102.8 டிகிரி கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இந்த பூகம்பம் சிகாமட்டிலிருந்து வடமேற்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த மாவட்டத்தைச் சுற்றி நில அதிர்வு உணரப்படலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தாங்கள் அவ்வப்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.




