செராஸ், ஆக.30- மித்ரா எனப்படும் இந்தியர் சமூக உருமாற்று பிரிவின் சினார் சஹாயா திட்டத்தின் வழி பலாக்கோங் தொகுதியிலுள்ள இந்தியர்கள் பயன் பெறுவது குறித்து தாம் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைவதாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் தெரிவித்தார்.
தங்களின் சேவை மையத்தை நாடி வரும் இந்தியர்களுக்கு மித்ரா சினார் சஹாயா திட்டத்தின் பல்வேறு உதவி திட்டங்களுக்கு மனு செய்வதற்குத் தாங்கள் உதவி வருவதாக அவர் சொன்னார்.
அவ்வகையில் பேறு குறைந்தோர் , கர்ப்பிணி பெண்கள், புற்றுநோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு நோய்களினால் அவதியுற்று வருவோர் இதற்கு விண்ணப்பம் செய்வதற்குத் தனது அலுவலகத்தினர் உதவி செய்து வருவதாக வேய்ன் ஓங் விவரித்தார்.
இரு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்தவர்களில் ஒரு சிலருக்கு உதவி நிதி கிடைத்துள்ளது. இதன் வழி அவர்களின் சுமை ஓரளவு குறைந்திருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார் அவர்.
மக்கள் குறிப்பாக இந்தியர்களின் சிரமங்களைப் போக்குவதற்காக மித்ரா வழி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இவ்வேளையில் தான் நன்றி கூறிக் கொள்வதாக வேய்ன் ஓங் குறிப்பிட்டார்.
மித்ரா வழி பலாக்கோங் இந்தியர்கள் பயன்- சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் மகிழ்ச்சி
30 ஆகஸ்ட் 2025, 9:57 AM



