கோல லங்காட் ஆக. 30- சிலாங்கூர் மாநிலத்தைச் 81,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் தேசிய வணிகக் குழு பொருளாதார நிதித் திட்டத்தின் வழி (தெக்குன்) பலன் பெற்றுள்ளனர். இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகையின் மதிப்பு மொத்தம் 490 கோடி வெள்ளியாகும்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மட்டும் மாநிலத்தில் மொத்தம் 2,684 தொழில்முனைவோருக்கு மொத்தம் 6.6 கோடி வெள்ளி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என
பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கூறினார்.
மக்களின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதிலும் பல்வேறு துறைகளில் தொழில்முனைவோரின் வணிக விரிவாக்கத்திற்கு உதவுவதிலும் தெக்குன் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
டத்தாரான் பந்தாய் மோரிப்பில் நேற்று நடைபெற்ற மகளிர் ஆர்வ தொழில்முனைவோர் மையத்தின் திறப்பு விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் 602,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் தெக்குன் நிதித் திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இதன் மதிப்பு 1,050 கோடி வெள்ளியை எட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
சிலாங்கூரில் மட்டும், 81,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் நிதி உதவி பெற்றுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பெண் தொழில்முனைவோர்கள். தெக்குன் வழி அவர்கள் தங்கள் பொருளாதார நிலையை வெற்றிகரமாக வலுப்படுத்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் 11 தெக்குன் சிலாங்கூர் தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான கடன் தொகையாக மொத்தம் 449,000 வெள்ளிப் பெற்றனர்.
தெக்குன் திட்டத்தின் வழி சிலாங்கூரில் 81,000 தொழில் முனைவோர் பயன் பெற்றனர்
30 ஆகஸ்ட் 2025, 9:55 AM


