ஜெனிவா, ஆக. 30- உலகின் 31 நாடுகளில் இவ்வாண்டு காலரா நோய்ப் பரவல் திடீரென அதிகரித்துள்ள நிலையில் 400,000 க்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (டபள்யூ.எச்.ஒ.) நேற்று கூறியது.
உலகளாவிய நிலையில் காலரா நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் மோதல்கள் மற்றும் வறுமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
மோதல்கள், பெரிய அளவிலான இடப்பெயர்வு, இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை நோயின் பரவலை அதிகரிக்கின்றன. குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் மோசமான உள்கட்டமைப்புகளினால் சுகாதார சேவை மற்றும் சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கடந்த ஆகஸ்டு 17 வரை உலகளவில் அளவில் 409,222 சம்பவங்களும் 4,738 மரணங்களும் பதிவு செய்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது காலரா சம்பவ எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்திருந்தாலும் இறப்பு விகிதம் சுமார் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
நோய்ப்பரவலின் அளவு, தீவிரத்தன்மை மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்கையில் சம்பந்தப்பட்ட நாடுகளில் நோய்ப் பரவல் ஆபத்து மிக அதிகமாக உள்ளது என்று அது தெரிவித்தது.
ஆறு நாடுகளில் இறப்பு விகிதம் 1 சதவீதத்தைத் தாண்டியது. நோய் மேலாண்மையில் கடுமையான இடைவெளிகளையும் சிகிச்சை பெறுவதில் தாமதங்களையும் இது வெளிப் படுத்தியது.
31 நாடுகளில் காலரா பரவல் அதிகரிப்பு- 400,000 சம்பவங்கள் பதிவு
30 ஆகஸ்ட் 2025, 9:25 AM


