பாலிக்பூலாவ், ஆக. 30 - இங்குள்ள சுங்கை ஆராவ், தாமான் துனாஸ் மூடாவிலுள்ள தங்களின் வீட்டில் கடந்த புதன்கிழமை தன் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்ததாகக் நம்பப்படும் ஆசிரியர் இன்று முதல் ஆறு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
கொலை முயற்சி குற்றத்திற்காக தண்டனை சட்டத்தின் 307 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக பாலிக் பூலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 30 வயது சந்தேக நபருக்கு எதிரான தடுப்பு உத்தரவை பிறப்பித்ததாக பாராட் டாயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சசாலி ஆடம் தெரிவித்தார்.
வங்கிக் கடன்கள் மற்றும் மின் வணிக தவணை செலுத்துவதில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் இவ்வாறு செயல்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
நிதிப் பிரச்சினைகள் காரணமாக தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் சந்தேக நபருக்கு வட்டி முதலைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என அவர் சொன்னார்.
அதிகாலை 6.00 மணியளவில் நடந்த சம்பவத்தில் அந்த ஆசிரியர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து காயப்படுத்திய தோடு கத்தியால் தன்னை தானே வெட்டி காயப்படுத்திக் கொண்டார்.
இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் இருந்து தனது மகள் அலறும் சத்தம் கேட்ட பாதிக்கப் பட்டவரின் தாயார் அச்சம்பவத்தைக் கண்டுபிடித்தார்.


