சிகாமாட் ஆக. 30- சிகாமாட்டில் இன்று காலை 7.29 மணிக்கு ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவானலேசான பூகம்பம் மீண்டும் ஏற்பட்டது. கடந்த எட்டு நாட்களில் இம்மாவட்டத்தில் ஏற்பட்ட ஐந்தாவது நிலநடுக்கம் இதுவாகும்.
இந்த நிலநடுக்கம் 2.5 டிகிரி வடக்கு மற்றும் 102.8 டிகிரி கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது. இந்த பூகம்பம் சிகாமாட்டிலிருந்து வடமேற்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக இந்த மாவட்டத்தைச் சுற்றி நில அதிர்வு உணரப்படலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் அவ்வப்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 6.13 மணிக்கு ரிக்டர் அளவில் 4.1 எனப் பதிவான நிலநடுக்கம் சிகாமாட்டை உலுக்கியது. புதன்கிழமை காலை 8.59 மணிக்கு (3.2), வியாழக்கிழமை மாலை 7.56 மணிக்கு (2.5) மற்றும் நேற்று அதிகாலை 4.24 மணிக்கு (3.4) எனநான்கு நிலநடுக்கங்கள் பதிவாகின.



