கோலாலம்பூர், ஆக. 30- எதிர்பாராத சம்பவங்கள் நிகழும் பட்சத்தில் விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்ய கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) மின் வசதிகளை முழுமையாக ஆய்வு செய்யும்படி மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.ஏ.எச்.பி.) நிறுவனம் பணிக்கப் பட்டுள்ளது.
அதிகபட்ச உஷ்ணம் காரணமாக மின் கம்பிகள் மற்றும் கேபிள்கள் தீப்பற்றியதே கே.எல்.ஐ.ஏ. முனையம் இரண்டில் மின் விநியோகம் தடை பட்டதற்கு காரணம் என கண்டறியப் பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
எது நடந்தாலும் விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்க படக்கூடாது என்பதோடு சீரான மின் விநியோகம் எப்போதும் வழங்கப்பட வேண்டும் என்பதால் விமான நிலைய மின் விநியோக கட்டமைப்பை முழுமையாக மறு ஆய்வு செய்யும்படி எம்.ஏ.எச்.பி.க்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என அவர் சொன்னார்.
எந்தச் சூழ்நிலையிலும் துணைச் சேவை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது முக்கியமாகும். மின் வசதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு அவர்களுக்கு 28 நிமிட நேரம் பிடித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.
கேபிள்களில் ஏற்பட்ட அதிகபட்ச வெப்பம் காரணமாக கே.எல்.ஐ.ஏ. இரண்டாவது முனையத்தில் நேற்று மின் சேவை துண்டிக்கப் பட்டதை எம்.ஏ.எச்.பி என்னும் ஏர்போட்ஸ் ஹோல்டிங் நிறுவனம். உறுதிப்படுத்தியது.



