ஷா ஆலம், ஆக. 29- இங்குள்ள எமரால்ட் மற்றும் சீபீல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக டபள்யூ.டபள்யூ.ஆர்.சி. தொண்டு அமைப்பு தலா 50,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
டபள்யூ. டபள்யூ.ஆர்.சி. சமூக நல கோல்ப் போட்டியை முன்னிட்டு கோத்தா கெமுனிங் சுங் வா சீனப் பள்ளியில் கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு இரவு விருந்து நிகழ்வில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இவ்விரு பள்ளிகள் சார்பிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் நன்கொடையைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதினோறாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்வில் பினாங்கு, செரிஸ் சமூக இல்லம் உள்பட ஆறு சமூக நல அமைப்புகள் மற்றும் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
இதனிடையே, தனது தொகுதியில் உள்ள எமரால்ட் மற்றும் சீபீல்ட் தமிழ்ப்பள்ளிகளுக்கு அந்த தொண்டு அமைப்பின் சார்பில் நன்கொடை வழங்கப்பட்டது குறித்து சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இத்தகைய சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வரும் தியே வேங் சாய் தலைமையிலான டபள்யூ.டபள்யூ.ஆர்.சி.அமைப்புக்கு தாம் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
எமரால்ட் தமிழ்ப்பள்ளிக்கு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கிய டபள்யூ.டபள்யூ.ஆர்.சி. அமைப்புக்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கி.தயாளன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நன்கொடையைக் கொண்டு பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.



