ஷா ஆலம், ஆக, 28 - விளைச்சலை அதிகரித்து சிலாங்கூரை உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி உற்பத்தி முன்னோடி மாநிலமாக மாற்றும் நோக்கில் ஐ.ஏ.டி.ஏ. வடமேற்கு சிலாங்கூர் திட்டத்தின் கீழ் 2,567 நெல் விவசாயிகள் இந்த ஆண்டு முழுவதும் தீவிர பயிற்சி பெறுகின்றனர்.
இந்த பயிற்சியில் நவீன நடவு நுட்பங்கள், நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு மற்றும் திறமையான கள மேலாண்மை ஆகியவையும் வழங்கப்படும் என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு கூறியது.
ஐ.ஏ.டி.ஏ. மூலம் உழவு இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் மற்றும் உர இயந்திரங்கள் போன்ற தானியங்கி உபகரணங்களை வழங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மற்றும் விரைவாக மகசூல் தரும் புதிய விதைகளையும் விவசாயிகளுக்கு
வழங்க முடிகிறது.
அதிகரித்த மகசூல், திறமையான உள்ளீடுகளின்
பயன்பாடு, நெல் வயல்களிலிருந்து அதிகரித்த வருமானம் மற்றும் ஐ.பி.எம். மூலம் பூச்சி மருந்து பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட வெற்றியின் குறியீடுகளுடன் விவேக நெல் விவசாயத்திற்கான முன்னோடி மாநிலமாக சிலாங்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மக்களவையில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்லிமின் யஹாயா எழுப்பிய கேள்விக்கு அமைச்சு வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறை உள்ளூர் அரிசி உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் நாட்டின் உணவுத் துறையை மாற்றுவதற்கான ஒரு முன்மாதிரியாக சிலாங்கூரை மாற்ற முடியும் அமைச்சு நம்புகிறது.
சிலாங்கூரிலுள்ள 2,567 விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி
28 ஆகஸ்ட் 2025, 10:20 AM


