கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 - 13ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் உள்ள கொள்கைகளுக்கு ஏற்ப இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, குஸ்கோப் உறுதிப்பூண்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பயிற்சி, இலக்கவியல் மாற்றம் மற்றும் மூலதன நிதி உதவிக்கான செயல்முறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தியர்களின் சமூக பொருளாதாரம் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வது மட்டுமின்றி, மலேசிய மடாணியின் கொள்கைக்கு ஏற்ப சமூக இயக்கத்தை விரைவுப்படுத்தி, வருமான இடைவெளியைக் குறைப்பதற்கு இச்செயல்முறை பயன்படுத்தப்படுவதாக, ரமணன் கூறினார்.
"2025-ஆம் ஆண்டு, தேசிய தொழில்முனைவோர் நிறுவனம்,INSKEN, இந்திய உருமாற்றுப் பிரிவு, மித்ராவுடன் இணைந்து மலேசிய இந்திய சமூக தொழில்முனைவோர் திட்டம், MICEP செயல்படுத்தியது.
இந்த திட்டத்தில் INSKEN-ஆல் தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதும் அடங்கும். தகுதிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் திட்டத்தை முடித்த பங்கேற்பாளர்களுக்கு மித்ராவின் மூலம் உதவி நிதி வழங்கப்படும்," என்றார் அவர்.
13-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத்தில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்முனைவோருக்கான பயிற்சி, இலக்கவியல் மாற்றம் மற்றும் மூலதன நிதியுதவி ஆகியவற்றை பெற உதவும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்து நாடளுமன்றத்தில் செனட்டர் டத்தோ ஸ்ரீ எஸ்.வேல்பாரி எழுப்பிய கேள்விக்கு, ரமணன் இவ்வாறு பதிலளித்தார்.
MICEP-இன் கீழ் KAKAPPS எனப்படும் அடிப்படை தொழில்முனைவோர் பயிற்சி, தயாரிப்பு மற்றும் சேவை மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றில் பங்கேற்க மொத்தம் 450 பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக, ரமணன் விவரித்தார்.
பெர்னாமா


