கோலாலம்பூர், ஆக. 28 - பதினைந்தாவது நாடாளுமன்றத் தவணைக்கான மக்களவைத் தேர்வுக் குழு உறுப்பினர் பொறுப்புக்கு பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் ரபிஸி ரம்லிக்கு பதிலாக போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற நிரந்தர விதிகளின் 76வது நிரந்தர விதியின் கீழ் பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சர் எம். குலசேகரன் சமர்ப்பித்த இந்தப் பிரேரணை பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பு வழி நிறைவேற்றப்பட்டது.
இந்த தேர்வுக் குழுவிற்கு சபாநாயகர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தலைமை தாங்குகிறார். இதில் ஆறு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அவர்களில் துணைப் பிரதமரும் பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப், போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் எம்.பி.யுமான அந்தோணி லோக் மற்றும் பிரதமர் துறை அமைச்சரும் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) பெங்கராங் எம்.பி.யுமான டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் ஆகியோரும் அடங்குவர்.
எதிர்க்கட்சித் தலைவரும் லாரூட் எம்.பி.யுமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மற்றும் கோத்தா பாரு எம்.பி. டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் ஆகியோர் எதிர்க்கட்சியை பிரதிநிதிக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்வுக் குழு உறுப்பினராக அமினுடின் ஹருண் நியமனம்
28 ஆகஸ்ட் 2025, 9:50 AM


