ஹனோய், ஆக. 28 - கஜிகி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தாய்லாந்தில் ஒருவரும் வியட்னாமில் எண்மரும் உயிரிழந்த நிலையில் மேலும் கடுமையான திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படும் என வியட்னாம் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை பிற்பகல் கரையைக் கடந்த இந்த புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து பின்னர் தாய்லாந்து மற்றும் வியட்னாமில் பரவலாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தாய்லாந்தின் எட்டு மாநிலங்களில் ஏற்பட்ட பலத்த மழையின் காரணமாக வெள்ளம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பேரிடரில் 180க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக தாய்லாந்து நாட்டின் பேரிடர் தடுப்புத் துறை கூறியது.
வியட்னாமில் ஏற்பட்ட புயல் மற்றும் அதனால் உண்டான வெள்ளத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதமடைந்ததோடு 86 ஹெக்டருக்கும் அதிகமான நெல்வயல்கள் நீரில் மூழ்கியதாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
இந்த புயல் காரணமாக மின்கம்பங்களும் சேதமடைந்தன. இதனால் 16 லட்சம் வீடுகளில் மின்தடை உண்டானது. நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரிய அளவில் தேசிய தின அணிவகுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த பேரிடர் காரணமாக ஹனோய் நகரின் தெருக்கள் நீரில் மூழ்கியுள்ளன.


