ad

காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான் தாக்குதல் - மலேசியா கடும் கண்டனம்

28 ஆகஸ்ட் 2025, 3:07 AM
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான் தாக்குதல் - மலேசியா கடும் கண்டனம்

புத்ராஜெயா, ஆக. 28 - இம்மாதம்  25ஆம் தேதி  காஸாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தோடு மேலும் பலர் காயமடைந்தனர்.

மருத்துவமனைகள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்களை குறிவைக்கும் இஸ்ரேலின் செயலுக்கு  மலேசியா தனது கடுமையான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

அதே சமயம், இந்த கோரத் தாக்குதல் நான்காவது ஜெனீவா மாநாடு மற்றும் மருத்துவமனைகள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்களைத்  தடைசெய்யும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று அது வலியுறுத்தியது.

இத்தகையச் செயல்கள் போர்க்குற்றங்களாகும். மேலும் அவை தண்டிக்கப்படாமல் விடப்படக்கூடாது என்றும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான வேண்டுமென்றே நடத்தப்படும் தாக்குதல்கள் அப்பாவி உயிர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் மட்டுமல்ல, ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலும் கூட என அது குறிப்பிட்டது.

இஸ்ரேலின் தொடர்ச்சியான அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவும் பேரழிவுகளுக்கு முழுமையாகப் பொறுப்பேற்கப்படுவதை உறுதி செய்யவும் அனைத்துலகச் சமூகம் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம்  உடனடியாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துகிறது.

1967ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில்  கிழக்கு ஜெருசலமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவுவது உட்பட பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான, நீதியான மற்றும் நீடித்த அமைதியை நோக்கிய முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு மலேசியா அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறது  என்று அறிக்கை கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.