ஜோகூர் பாரு, ஆக. 27 - இன்று காலை சிகாமட் வட்டாரத்தை உலுக்கிய 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் பின்அதிர்வு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
காலை 8.59 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்ததாக வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹிஷாம் முகமது அனிப் க கூறினார்.
ஜோகூர் மற்றும் தெற்கு பகாங்கின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. லேசான நிலநடுக்கம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
வானிலை ஆய்வுத் துறை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து சமீபத்திய தகவல்களை வழங்கும். மேலும் அதன் வலைத்தளம், சமூக ஊடகங்கள் மற்றும் 1300-221-638 ஹாட்லைன் மூலம் சரிபார்க்கப்பட்ட தகவல்களைப் பெறுமாறு பொதுமக்களை அது கேட்டுக் கொண்டது. இந்த பூகம்பத்தில் பொருட்சேதம் சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
வானிலை ஆய்வுத் துறை நிலைமையைக் கண்காணித்து வருகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்புடைய நிறுவனங்களும் சிகாமட்டில் நிலைமை பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன என்று சிகாமட் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் முகமட் எஸ்ஸுடின் சனுசி கூறினார்.
மக்கள் அமைதியாக இருக்கவும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் வானிலை ஆய்வுத் துறை மற்றும் அரசு நிறுவனங்கள் போன்ற அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்
சிகாமாட்டில் பூகம்பம் - பொருட்சேதம், உயிருடற்சேதம் இல்லை
27 ஆகஸ்ட் 2025, 9:19 AM




