பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 27 - மலேசியாவில் பள்ளி குழந்தைகள் மத்தியில் 'கிட்டப்பார்வை' (Myopia) பிரச்சனை சாதாரணமான ஒன்றாக மாறக்கூடிய அபாய நிலையை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
15 வயதிற்குட்பட்ட மாணவர்களில் மூன்றில் ஒருவருக்கு ஏற்கனவே கிட்டப்பார்வை பிரச்னை உள்ளதாகவும், இது தொடக்கப் பள்ளியில் 7 சதவீதமாக இருந்த நிலையில் இடைநிலைப் பள்ளிக்கு செல்லும் போது 30 சதவீதமாக உயர்வுக் கண்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீண்ட நேர திரை பயன்பாடு, நகர்ப்புற வாழ்க்கை முறை, வெளிப்புற விளையாட்டு இல்லாமை ஆகியவை இப்பிரச்சனைக்கு முக்கிய காரணங்கள் என்று யூகேஎம் (UKM) கண் மருத்துவ நிபுணர் பேராசிரியர் டாக்டர் கேத்தரின் பாஸ்டியன் கூறியுள்ளார்.
"மேலும், கண் சிமிட்டுதல், தலைவலி அல்லது தங்கள் குழந்தை தொலைக்காட்சி அருகில் செல்வது போன்ற அறிகுறிகளைக் பெற்றோர்கள் பெரும்பாலும் கவனிக்காமல் இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
இதில் சுகாதார அமைச்சகம் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். என்றும், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற நாடுகளைப் பின்பற்றுமாறு மலேசியாவை அவர் கேட்டுக் கொண்டார். அங்கு பள்ளிகள் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டாயமாக்கியுள்ளன.


