ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 27: ஜோகூர், செகாமட்டில் இன்று காலை 8.59 மணிக்கு 3.2 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்திலும் தெற்கு பஹாங்கிலும் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செகாமட்டில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தெற்கே நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது 2.33 டிகிரி வடக்கு மற்றும் 102.79 டிகிரி கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையமாகக் கொண்டதாகவும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
“இந்த நிலநடுக்கத்தின் நிலைமை மெட்மலேசியா தொடர்ந்து கண்காணிக்கும்” என்று அதன் முகநூலில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் விசாரணைகளுக்கு உதவ மெட்மலேசியா வழங்கிய கேள்வித்தாளை https://forms.gle/JMGSQhuAKdtwWn2a7 என்ற இணைப்பின் மூலம் நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆகஸ்ட் 24 ஆம் தேதி, செகாமட்டில் காலை 6.13 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மெட்மலேசியா உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு குளுவாங்கிலிருந்து வடமேற்கே 28 கிமீ தொலைவில் உள்ள யோங் பெங்கில் 10 கிமீ ஆழத்தில் 2.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா


