இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிணையில் விடுவிப்பு

27 ஆகஸ்ட் 2025, 3:05 AM
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிணையில் விடுவிப்பு

கொழும்பு, ஆக. 27 - ஆட்சியில் இருந்தபோது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இலங்கை  முன்னாள் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அந்நாட்டு  நீதிமன்றம் நேற்று  ஜாமீன் வழங்கியது.

அரசு நடத்தும் மருத்துவமனையிலிருந்தவாறு  ஜூம் மூலம் 76 வயதான விக்ரமசிங்கே நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றார். 

மருத்துவரின் ஆலோசனையின்  பேரில்  உடல்நிலையை கண்காணிக்க  வார இறுதியில் அவர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டதாக அவரது ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) கூறியது.

விசாரணை நடைபெறுவதற்கு  முன் மத்திய கொழும்பில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிறத் தடுப்புகளை வைத்து போலீசார் அந்த வளாகத்தை சுற்றி வளைத்தனர்.

"இது நமது நீதித்துறையின் சுதந்திரத்தின் அடையாளம்" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் துணைச் செயலாளர் அகிலா விராஜ் காரியவசம் நீதிமன்றத்திற்கு வெளியே
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாங்கள் ஜனநாயகம் மற்றும் உரிய நடைமுறைக்கு ஆதரவளிக்க வந்தோம். ஊழலுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அவர் சொன்னார்.

கடந்தாண்டு நடைபெற்ற அதிபர்  தேர்தலில் அதிகாரத்தை இழந்த விக்ரமசிங்கே நிரபராதி என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. மேலும் அவர் மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் குற்றஞ்சாட்டியது.

இத்த குற்றச்சாட்டை  இலங்கையின் ஆளும் கட்சியின் தலைவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மறுத்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரிட்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தனது மனைவி  கௌரவப் பேராசிரியர் பட்டம் பெற்றதைக்  கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட  சிறப்பு  மதிய உணவில் கலந்து கொள்ள விக்கிரமசிங்கே மேற்கொண்ட பயணம் குறித்த விசாரணையின் அடிப்படையில் விக்ரமசிங்கே மீதான வழக்கு அமைந்துள்ளது.

தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராகவும்  ஆறு முறை பதவி வகித்து சாதனைப் படைத்துள்ளார். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.