ஷா ஆலம், ஆக. 26 - சிறு தொழில்முனைவோர் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.
டிக்டோக் ஸ்டுடியோ, மைமால் தளம், தேசிய தொழில் முனைவோர் நிறுவனம் (இன்ஸ்கேன்) மற்றும் தெக்குன் நேஷனல் ஆகியவற்றின் வழிகாட்டுதல் திட்டங்களின் மூலம் டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்துவதும் இந்த முன்னெடுப்புகளில் அடங்கும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.
சிறு வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தினம், கூட்டுறவு மடாணி விற்பனை மற்றும் தொழில்முனைவோர் விழா போன்ற திட்டங்களை ஆதரிப்பதோடு ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொழில் திட்டத்தின் மூலம் இணை வணிகத்தை வழங்குகிறது என்று அவர் இன்று மக்களவையில் கேள்வி பதில் அமர்வில் தெரிவித்தார்.
குறைந்த விலையில் பொருள்களை வழங்கும்
ரஹ்மா மற்றும் சாரா விற்பனை திட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிறு வணிகர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கோல கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
சிறந்த வணிக வாய்ப்புகளை வழங்கவும் கிராமப்புற பொருளாதாரத்தின் நிலையை மேம்படுத்தவும் இவ்வாண்டு சபா மற்றும் சரவாக்கில் 98 கிராம விருந்தினர் திட்டங்களை உருவாக்க அரசாங்கம் 1.8 கோடி வெள்ளிக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது
மலேசியா மடாணி கோட்பாட்டிற்கு ஏற்ப உள்ளூர் பொருளாதாரத்தின் நாடித் துடிப்பாக விளங்கும் சிறு வணிகர்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அக்கறையை இந்த தொடர் முயற்சி பிரதிபலிக்கிறது என்று ரமணன் குறிப்பிட்டார்.
ரஹ்மா விற்பனை வணிகர்களை பாதிக்கவில்லை - ரமணன் விளக்கம்
26 ஆகஸ்ட் 2025, 9:53 AM