மலேசியாவின் வரலாற்றுப் பதிவுகளை பாதுகாக்கும் பழஞ்சுவடி காப்பகம்

26 ஆகஸ்ட் 2025, 8:17 AM
மலேசியாவின் வரலாற்றுப் பதிவுகளை பாதுகாக்கும் பழஞ்சுவடி காப்பகம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - மலேசியாவின் வரலாற்றுப் பதிவுகள் மட்டுமின்றி, இனம், சமுதாயம் மற்றும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஆதாரங்களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய கடமையை தேசிய பழஞ்சுவடி காப்பகம் கொண்டிருக்கின்றது.

மேலும், வரலாற்றை பாதுகாப்பதன் முக்கியத்தும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அக்காப்பகம் தவறவில்லை.

சேகரிக்கப்பட்டிருக்கும் வரலாற்று சான்றுகளையும் அவற்றை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும், தேசிய தினக் கொண்டாட்ட சிறப்பு நேர்காணலின் போது அதன், அரசாங்க பதிவு நிர்வகிப்பு பிரிவின் இயக்குநர் கௌரி பி.எஸ் தங்கய்யா விளக்கினார்.

நாடு சுதந்திரம் அடைந்த அதே ஆண்டில் டிசம்பர் முதலாம் தேதி தேசிய பழஞ்சுவடி காப்பகம் செயல்படத் தொடங்கியது.

1642ஆம் ஆண்டில் இருந்த ஆவணங்கள் தொடங்கி இன்று வரை பல வரலாறு குறிப்புகள், ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், பல்வேறு மொழி நாளிதழ்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை தேசிய பழஞ்சுவடி காப்பகம் பாதுகாத்து வருவதாக கௌரி பி.எஸ் தங்கய்யா தெரிவித்தார்.

"அந்தக் காலக்கட்டத்தில் இருந்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்யர்கள், ஜப்பானியர்கள் காலக்கட்டத்தில் என்னென்ன ஆவணங்கள் இருந்ததோ, முடிந்த வரை அவற்றை சேகரித்து வைத்திருக்கின்றோம். அந்த வகையில், 17ஆம் நூற்றாண்டில் நம் தமிழர்கள் இந்தியாவில் இருந்து புலம்பெற்று மலேசியாவிற்கு வந்தார்கள்," என்றார் அவர்.

பழஞ்சுவடி காப்பகத்தில் இந்திய சமுதாயம் தொடர்பான பழங்காலத்து ஆவணங்கள், சமுதாயத் தலைவர்களின் புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவையும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

அதோடு, நாட்டின் மூத்த தமிழ் நாளிதழான தமிழ்நேசன் பத்திரிக்கையின் முதல் வெளியீடும் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதர நாளிதழ்களின் குறிப்புகளும் சேகரிப்பில் இருந்து விடுபடவில்லை.

இவை அனைத்தும் மக்களின் பார்வைக்கு செல்ல வேண்டும் என்று நோக்கத்தில் ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளை பழஞ்சுவடி காப்பகம் மேற்கொண்டு வருகிறது என கௌரி குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.