ஷா ஆலம், ஆக. 26 - இங்குள்ள ஸ்ரீ மூடாவில் இரு வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
சுங்கை கிளாங் வெள்ளத் தணிப்புத் திட்டம் (ஆர்.டி.பி.) மற்றும் சிலாங்கூர் மெரிடைம் கேட்வே (எஸ்.எம்.ஜி.) ஆகியவை அவ்விரு திட்டங்களாகும்.
மத்திய அரசின் மேற்பார்வையில் கிள்ளான் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்.டி.பி. திட்டம் தாமான் ஸ்ரீ மூடா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு கூறியது.
ஸ்ரீ மூடாவில் வெள்ள நீர் சேகரிப்பு குளத்தை தரம் உயர்த்துவது, சுங்கை ராசாவ் ஆற்றில் மாற்று வழியை ஏற்படுத்துவது, மதகுகளை நிறுவுவது, அணைகளை அமைப்பது, ஆற்றின் கரைகளை வலுப்படுத்துவது ஆகியவை அந்த திட்டப் பணிகளில் அடங்கும் என மக்களவையில் இன்று வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் அமைச்சு குறிப்பிட்டது.
தாமான் ஸ்ரீ மூடாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்.டி.பி. திட்டம் மற்றும் அதே பகுதியில் அமல்படுத்தப்பட்டுள்ள எஸ்.எம்.ஜி. திட்டம் ஆகியவற்றின் பணி வேறுபாடுகள் குறித்து ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்.டி.பி. திட்டம் வெள்ள மேலாண்மையை மட்டும் நோக்கமாக கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த உள்கட்டமைப்புத் திட்டமாகும் எனவும் அது தெளிவுபடுத்தியது.
அதே சமயம், கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எஸ்.எம்.ஜி. திட்டம் லண்டாசான் லுமாயான் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் வாயிலாக கிள்ளான் ஆற்றை சுத்தப்படுத்தி பராமரிக்கும் நோக்கில் மாநில அரசு அமல்படுத்திய திட்டம் என்றும் அமைச்சு விளக்கியது.


