ஷா ஆலம், ஆக. 26 - சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான 2025ஆம் ஆண்டு பூப்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த போட்டிக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் ஆகியோர் சிறப்பு வருகைmபுரிந்தனர்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஆதரவுடன் கே.இ.சி. கால்பந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த பூப்பந்து போட்டியில் மாநிலத்திலுள்ள தமிழ்பள்ளிகளைச் சேர்ந்த 42 குழுக்கள் பங்கேற்றன.
மாணவர்கள் மத்தியில் விளையாட்டு உணர்வை மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இந்த போட்டி விளங்கியது. அதே சமயம், விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் இடையே அணுக்கமான உறவை ஏற்படுத்தும் தளமாகவும் இது விளங்கியது.
இத்தகைய போட்டிகள் மாணவர்கள் மத்தியில் விளையாட்டுத் திறனை அதிகரிக்க உதவும் அதேவேளையில் கட்டொழுங்கு, குழு உணர்வு, மனவுறுதி கொண்ட இளம் தலைமுறையினரின் உருவாக்கத்திற்கும் பெரிதும் உதவும்.
கே.இ.சி. கால்பந்து சங்கம், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் மற்றும் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் ஒத்துழைப்புடன் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த போட்டி எதிர்வரும் காலங்களில் மேலும் பல நிகழ்வுகளை நடத்துவதற்குரிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.




