கோலாலம்பூர், ஆக 25 - பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக் குறிப்புகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதோடு சாலைப் போக்குவரத்துத் துறையிடமிருந்து (ஜே.பி.ஜே.) வாகன வகை ஒப்புதல் சான்றிதழை (வி.டி.ஏ.) பெற வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
தொழில்நுட்ப ரீதியாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வர்த்தக நோக்கத்திற்கான சரக்கு வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜே.பி.ஜே. ஆட்டோமோட்டிவ் பொறியியல் பிரிவின் ஒப்புதலையும் அனுமதியையும் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் மாற்றியமைக்கப்பட்டு நிபந்தனைகளை பின்பற்றாத மற்றும் வி.டி.ஏ. ஒப்புதல் இல்லாத எந்தவொரு மோட்டார் சைக்கிளும் பயன்பாடு சட்டத்திற்கு உட்பட்டதல்ல. ஆகவே அத்தகைய வண்டிகளுக்கு காப்பீடு இல்லை. சாலை வரியும் செலுத்துவதில்லை.
ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே தங்களின் பாதுகாப்புக்கும் வாகனத்தை சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதற்கும் ஏதுவாக
பயனாளிகள், விவசாயிகள் மற்றும் பிறர் முறையான ஒப்புதலைப் பெறுமாறு நாங்கள் அறிவுறுத்த விரும்புகிறோம் என்று அவர் இன்று மக்களவையில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.
கிராமப்புறங்களில் விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்லவதற்காக மாற்றியமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க அமைச்சு எந்த அளவிற்குத் தயாராக உள்ளது என்று சபாக் பெர்ணம் தொகுதி உறுப்பினர் கலாம் சலான் எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மூன்று சக்கர வண்டிகளுக்கு ஜே.பி.ஜே.வின் ஒப்புதல் அவசியம் - அமைச்சர் தகவல்
25 ஆகஸ்ட் 2025, 7:27 AM


