கோலாலம்பூர், ஆக. 25 - இங்குள்ள ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையின் டாமன்சாரா டோல் சாவடி அருகே கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனையின் போது கார் ஒன்றில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் முன்னாள் முக்கியத் தலைவரின் மகன் கைது செய்யப்பட்டார்.
இருபது வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் உறுதிப்படுத்தினார்.
சந்தேக நபர் அந்த நெடுஞ்சாலையின் 0.6 கிலோ மீட்டரில் சந்தேகத்திற்கிடமான முறையில் அதிவேகமாகப் பின்னோக்கி வாகனத்தைச் செலுத்தியதைத் தொடர்ந்து போலீசார் அதனை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் சிறிய அளவு ஹெராயின் மற்றும் போதைப்பொருள் பயனீட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த நபர் மேல் நடவடிக்கைக்காகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தில் உள்ள போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சந்தேக நபருக்கு எதிராகப் போதைப்பொருள் தொடர்பான இரண்டு முந்தைய பதிவுகளும் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் முக்கியத் தலைவரின் மகன் போதைப் பொருள் வழக்கில் கைது
25 ஆகஸ்ட் 2025, 4:12 AM