கோலாலம்பூர், ஆக. 25 - டாமன்சாரா- ஷா ஆலம் அடுக்கு நெடுஞ்சாலை (டேஷ்) மற்றும் அதன் அடுக்குச் சாலை வளைவுப் பகுதி ஆகியவற்றின் கட்டுமானம் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கேற்ப அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட பொறியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த நெடுஞ்சாலையின் வடிவமைப்பு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாக புரோஜெக் லிந்தாசான் ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் (புரோலிந்தாஸ்) நிறுவனம் ஓர் அறிக்கையில் கூறியது.
அந்த நெடுஞ்சாலையின் வடிவமைப்பு அனைத்து பாதுகாப்பு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ள போதிலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முக்கிய இடங்களில் கூடுதல் அறிவிப்பு பலகைகளை நிறுவுவது, விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிடுவது, பாதுகாப்பு வேலிகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என அது தெரிவித்தது.
அந்த நெடுஞ்சாலைப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த இரு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.
அடுக்குச் சாலைகளிலும் வளைவானப் பகுதிகளிலும் பயணிக்கும் போது கூடுதல் கவனம் செலுத்தும் அதேவேளையில் வேகக் கட்டுப்பாட்டையும் பின்பற்றும்படி வாகனமோட்டிகளை அது கேட்டுக் கொண்டது.
அந்த விபத்துகள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்பட அனைத்து ஆதாரங்களையும் தாங்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
பத்தொன்பது வயது உயர்கல்விக்கூட மாணவர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் நேற்று காலை 10.40 மணியளவில் அந்த நெடுஞ்சாலையின் அடுக்குச் சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அடுக்குச் சாலையின் 21 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்.


