குவாந்தான், ஆக. 25 - கார் மற்றும் நான்கு சக்கர இயக்க வாகனம் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் சிறுமி உள்பட மூவர் பலியான வேளையில் மேலும் நால்வர் காயங்களுக்குள்ளாயினர்.
இந்த கோரச் சம்பவம் குவாந்தான்-சிரம்பான் சாலையின் 142வது கிலோ மீட்டரில் பண்டார் துன் ரசாக், புக்கிட் சோரோக் அருகே நேற்று மாலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 4.46 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.
ஒரு ஆடவர், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி பயணம் செய்த அந்த கார் நெகிரி செம்பிலான் பகாவிலிருந்து ரொம்பின், முவார்ட்ஸாம் ஷா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது அந்த கார் ஆடவர் ஒருவர் ஓட்டி வந்த நான்கு சக்கர இயக்க வாகனத்துடன் மோதியது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் பெண்மணி ஒருவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
நான்கு சக்கர இயக்க வாகனத்தின் ஓட்டுநர் உள்பட இதர அறுவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
அவர்களில் 18 வயது இளம் பெண்ணும் மூன்று வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என அப்பேச்சாளர் தெரிவித்தார்.
இதனிடையே, இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஷாரிப் ஷாய் மண்டோய், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் இன்னும் பெறப்படவில்லை என்றார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் தொடர்பான மேல் விபரங்களை திரட்டும் பணி இன்னும் முழுமை பெறவில்லை என்றார் அவர்.