ஜோகூர் பாரு, ஆக 24- இன்று அதிகாலை சிகாமட் வட்டாரத்தை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் குளுவாங்கிலிருந்து வடமேற்கே 28 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இரண்டாவது நில அதிர்வைத் தொடர்ந்து ஜோகூர் மலேசிய சிவில் பாதுகாப்புப் படை (ஏ.பி.எம்.) எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள முழு விழிப்புடன் உள்ளது.
இந்த பேரிடரால் கடுமையான சேதம் ஏற்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை என்று ஜோகூர் மாநில ஏ.பி.எம். இயக்குநர் உதவி ஆணையர் கமால் மொக்தார் கூறினார்.
எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலைமையைக் கண்காணிக்க தமது படை உறுப்பினர்களைத் திரட்டியுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பேரிடர் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் எங்கள் பணியாளர்கள் உதவத் தயாராக உள்ளனர். தற்போதைய நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் ஆரம்ப கண்காணிப்புக்காக ஏழு ஏ.பி.எம். உறுப்பினர்கள் ஷிப்டு அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகாமட்டில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
உள்ளூர்வாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிலநடுக்கத்தால் சிறிய சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சிகாமட், சூராவ் கம்போங் சாங்லாங் உள்ளிட்ட இடங்களின் கள அறிக்கைகளையும் தமது தரப்பு மதிப்பீடு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை, பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். தேவை ஏற்பட்டால் கூடுதல் உறுப்பினர்களை திரட்டுவோம் என்று அவர் சொன்னார்.
இன்று அதிகாலை 6.13 மணிக்கு சிகாமட்டில் 4.1 ரிக்டர் அளவில் ஒரு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதை
மலேசிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு குளுவாங்கிலிருந்து வடமேற்கே 28 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 2.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.



