ஷா ஆலம், ஆக 24 - கருத்துக்கள், அறிவாற்றல் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பி.பி.ஏ.எஸ்.) கசகஸ்தான் குடியரசின் தேசிய நூலகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் எழுத்தறிவு, தகவல் வள மேலாண்மை, நூலக சமூக திறன் மேம்பாடு மற்றும் குறிப்பு சேகரிப்புகளின் பரிமாற்றம் போன்ற துறைகளில் விவேக பங்காளித்துவம் மீது கவனம் செலுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி கூறினார்.
பல்வேறு கலாச்சார மற்றும் கல்வித் திட்டங்களை செயல்படுத்துவதிலும், நூலகத் துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் மலேசியாவில் உள்ள கசகஸ்தான் தூதரகம்
முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.
கசகஸ்தானின் நாட்டின் அல்மாட்டிக்கான தனது பணி நிமித்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வை நேரில் கண்ட பிறகு அமிருடின் இவ்வாறு கூறினார்.
கசகஸ்தான் குடியரசின் தேசிய நூலகத்துடனான சந்திப்புக்கு கசகஸ்தான் கலாச்சாரம் மற்றும் தகவல் அமைச்சின் காப்பகங்கள், ஆவணங்கள் மற்றும் புத்தக விவகாரக் குழுவின் தலைவர் ருஸ்தம் அலி தலைமை தாங்கினார்.
அறிவாற்றல் பகிர்வை அதிகரிக்க கசகஸ்தான் நூலகத்துடன் சிலாங்கூர் ஒத்துழைப்பு
24 ஆகஸ்ட் 2025, 7:07 AM




