சிகாமாட்டில் மிதமான நிலநடுக்கம்- வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பதற்றம்
ஜோகூர் பாரு, ஆக. 24- இன்று காலை சிகாமட்டில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தங்கள் அன்றாடப் பணிளை தொடங்கத் தயாராகி வந்த குடியிருப்பாளர்கள் இடையே இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இன்று அதிகாலை 6.13 மணியளவில் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது ஜாலான் தாசேக் ஆலாய் பகுதியில் உள்ள தனது வீடு திடீரென குலுங்கியது கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக தனியார் துறை ஊழியரான 32 வயது நூர் ஹபீஸ் முக்மின் கூறினார்.
வீட்டின் கட்டமைப்பு இடிந்து விழும் நிலையில் இருப்பதாக முதலில் நினைத்தேன். அதனால் என் பிள்ளைகளை எழுப்ப விரைந்தேன். என் மனைவியை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறச் சொன்னேன். நாங்கள் வெளியே சென்றபோதுதான் அது ஒரு பூகம்பமாக இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் எனக்குத் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.
சில வினாடிகளுக்குப் பிறகு நிலைமை அமைதியான போதிலும் அந்த அதிர்வினால் எழுந்த அச்சத்தைத் தொடர்ந்து தன் மகன் வீட்டிற்குள் திரும்பிச் செல்ல இன்னும் பயந்தான் என அவர் சொன்னார்.
தாம் தொழுகையை நிறைவேற்றும்போது தனது வீட்டில் உள்ள கண்ணாடி கடுமையாக குலுங்கிய போது நில அதிர்வு ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக கம்போங் ஜாபியில் வசிக்கும் 66 வயதான இல்லத்தரசி நார்மலா முகமது கூறினார்.
ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில் நான் உடனடியாக சமையலறைக்கு விரைந்தேன். அதிர்ஷ்டவசமாக, வீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் சிறிதும் எதிர்பாராதது என்று அவர் கூறினார். நிலநடுக்கம் சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. ஆனால் அதன் தாக்கம் நன்கு உணரப்பட்டது என்றார் அவர்.
இதற்கிடையில், இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தனது வணிக வழக்கத்தை ஓரளவு பாதித்ததாக நாசி லெமாக் வர்த்தகரான சித்தி ருபியா யாசின் (வயது 52) தெரிவித்தார்.
முன்னதாக, அதிகாலை 6.13 மணிக்கு உணரப்பட்ட பலவீனமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலவீனமான கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கும் அதே வேளையில் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும்படி ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஷ் காஸி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
சிகாமாட் மாவட்ட அதிகாரி முகமது எஸ்ஸுனுடின் சனுசியைத் தாம் தொடர்பு கொண்ட போது இதுவரை எந்த உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்ததாக ஓன் ஹபிஷ் கூறினார்.
சிகாமாட்டில் மிதமான நிலநடுக்கம்- வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பதற்றம்
24 ஆகஸ்ட் 2025, 5:42 AM



