புக்கிட் மெர்தாஜம், ஆக 24- இங்குள்ள பெராபிட் மலைப் பாதையில் நடைபயணம் மேற்கொண்டபோது வழி தவறி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தவித்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினரை நேற்று இரவு தீயணைப்புத் துறையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
ஒரு தம்பதியினரும் அவர்களது இரு பிள்ளைகளும் வனப்பகுதியில் காணாமல் போனது தொடர்பில் இரவு 8.08 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்
அந்தப் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது அவர்கள் வழிதவறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மாலை 6.00 மணிக்கு நடைபயணத்தைத் தொடங்கிய அவர்கள் மலையின் அடிவாரத்திற்குத் திரும்புவதற்கான பாதையைக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டனர் என்பது அறியப்படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களால் அவர்கள் இரவு 10.09 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் மலையின் அடிவாரத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
புக்கிட் மெர்தாஜாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் குழு மற்றும் புக்கிட் மெர்தாஜாம் தன்னார்வ தீயணைப்புத் துறையின் உதவியுடன் இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டதாக அவர் கூறினார்.
மலையேறும்போது வழி தவறிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நல்வர் மீட்பு
24 ஆகஸ்ட் 2025, 5:21 AM


