சபாக் பெர்ணம், ஆக. 24- வேப் எனப்படும் மின்- சிகிரெட்டுகளை தடை செய்யும் பரிந்துரை தொடர்பான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ முடிவுக்காக மாநில அரசு காத்திருக்கிறது.
மின் சிகிரெட்டுகளுக்கு நாடு தழுவிய நிலையில் தடை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது நாடாளுமன்றத்தில் கூறியதை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இதன் தொடர்பில் மேலும் விபரங்களைப் பெற நாங்கள் முயன்று வருகிறோம். இருப்பினும் இதுவரை அந்த தடை எப்போது அமல் செய்யப்படுவதற்கான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் சொன்னார்.
மாநில அரசின் எந்த உத்தரவும் கொள்கைகளும் மத்திய அரசின் நிலைப்பாட்டை சார்ந்துதான் உள்ளன. நாடு முழுவதும் தடையை அமல்படுத்த சுகாதார அமைச்சு முடிவெடுத்தால் அது சிலாங்கூரையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கும் என்றார் அவர்.
இங்குள்ள பெங்காலான் சபாக்கில் நேற்று மூன்றாம் கட்ட பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநிலத்தைப் பொறுத்த வரை, தற்போதைக்கு வேப் பயனீட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களை அகற்றும் பணியில் மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்று ஜமாலியா சொன்னார்.
மின்னியல் சிகிரெட்டுகளுக்கு தடை விதிப்பது தொடர்பான அமைச்சரவை அறிக்கை கூடின பட்சம் இவ்வாண்டு இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்று டாக்டர் ஜூல்கிப்ளி முன்னதாக கூறியிருந்தார்.



