சபாக் பெர்ணம், ஆக. 24 - அடுத்தாண்டு தொடங்கி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு அனைத்து வர்த்தக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு மாநில அரசு தடை விதிக்கவுள்ளது
இந்த அமலாக்கம் தொடர்பான சட்டங்களை சிலாங்கூர் மாநில சட்டத் துறை தற்போது
மறுஆய்வு செய்து வரும் வேளையில் அப்பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பான அரசிதழ் வரைவும் இதில் அடங்கும். முறையான சட்ட அங்கீகாரம் இல்லாமல் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால் யாரும் பின்பற்றி நடக்க மாட்டார்கள் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தடைக்கான வரைவு மசோதாவை சட்டத் துறை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால்தான் பிளாஸ்டிக் இல்லாத நான்கு தொடர் விழா பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது என அவர் சொன்னார்,
பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் வரவிருக்கும் தடைக்குத் பொதுமக்களை தயார்படுத்தும் நோக்கிலும் இது ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
இங்குள்ள பெங்காலான் சபாக்கில் பிளாஸ்டிக் இல்லாத பிரச்சார இயக்கத்தின் மூன்றாவது தொடரை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் ஜமாலியா இதனைக் கூறினார்.
மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் திட்டத்தை மாநில அரசு ஆராய்ந்து வருவதாகவும் இதன் வழி பயனீட்டாளர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை சொந்தமாக கொண்டு வருவதை ஊக்குவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரில் வெள்ளி முதல் ஞாயிறு வரை பிளாஸ்டிக் பைகளுக்கு தடை- அடுத்தாண்டு அமல்
24 ஆகஸ்ட் 2025, 3:57 AM


