ஜோகூர் பாரு, ஆக. 24- ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் வட்டாரத்தில் இன்று அதிகாலை 6.1 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலவீனமான கட்டுமானங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கும் அதே வேளையில் அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றி நடக்கும்படி ஜோகூர் மாநில அரசு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சிகாமாட் மாவட்ட அதிகாரி முகமது எஸ்ஸுடின் சனுசியைத் தாம் தொடர்பு கொண்டதாகவும் இந்த பூம்பத்தால் உயிருடற்சேதம் அல்லது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது தொடர்பில் எந்தப் புகாரும் கிடைக்கவில்லை என்றும் ஜோகூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஓன் ஹபிஷ் கூறினார்.
மாநில அரசு இதரத் துறைகளுடன் இணைந்து நிலையை அணுக்கமாக கண்காணித்து வருகிறது. பலவீனமான கட்டுமானங்களுக்கு அருகில் செல்வதை தவிர்ப்பதோடு அதிகாரிகளின் உத்தரவையும் பின்பற்றி நடக்கும்படி பொது மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மலேசிய வானிலை ஆய்வுத் துறையும் உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்டு சமீபத்திய நிலவரங்களை அவ்வப்போது தெரிவித்து வரும் என்றார் அவர்.
இதனிடையே, இந்த பூகம்பம் தொடர்பில் வானிலை ஆய்வு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சுற்றுச் சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.
ரிக்டர் அளவில் 4.1 எனப்பதிவான அந்த நிலநடுக்கம் ஜோகூர் பாருவிலிருந்து 180 கிலோ மீட்டரில் மையமிட்டிருந்ததை வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பூகம்பத்தின் தாக்கம் காரணமாக ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் தென் பகாங் ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.


