கோலாலம்பூர், ஆக. 22 - கடந்த மே மாதம் ஆண் குழந்தைக்கு மரணம் ஏற்படும் அளவுக்கு பராமரிப்பில் போதுமான அக்கறையும் கண்காணிப்பும் இன்றி இருந்ததாக குழந்தை பராமரிப்பு மையம் ஒன்றின் பராமரிப்பாளர் மீது இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி சித்தி ஷகிரா மொக்தாருடின் முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 24 வயதான நோர் ஃபாத்ஹா அப்துல் ரஹிம் மறுத்து விசாரணை கோரினார்.
பராமரிப்பாளர் என்ற முறையில் சரியான கண்காணிப்பையும் பராமரிப்பையும் வழங்காத காரணத்தால், கடந்த மே மாதம் 26ஆம் தேதி வங்சா மாஜூவிலுள்ள பராமரிப்பு மையம் ஒன்றில் ஏழு மாதம் ஒன்பது நாட்கள் நிரம்பிய ஆண் குழந்தைக்கு மரணம் ஏற்பட்டதாக அப்பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 33(1)(ஏ) பிரிவின் கீழ் அப்பெண் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட போது தேம்பித் தேம்பி அழுத அப்பெண்ணை அவரது உறவினர்கள் தேற்றினர். பின்னர் அவர் விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்ற லாக்கப்பிற்கு கொண்டு செல்லப்பட்டார்.