ஜோர்ஜ் டவுன், ஆக. 22- நேற்று நண்பகல் 12.00 மணி தொடங்கி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் இங்குள்ள ஜாலான் பாயா தெருபோங்கில் குடியிருப்புக்கு பகுதிக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஆயினும், சரிவானப் பகுதியில் அமைந்துள மூன்று வீடுகளுக்கு அருகில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது தொடர்பில்
மாலை 3.41 மணிக்கு தமது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அதிகாரி முகமது சயாபிசானி முகமது ரோஸ்லி கூறினார்.
இதனைத் தொடர்ந்து பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அந்த மூன்று வீடுகளுக்கும் அருகிலுள்ள சரிவில் சுமார் 21 சதுர மீட்டர் அளவிலான நிலச்சரிவை ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இரண்டு வீடுகள் மேல் பகுதியிலும் ஒரு வீடு கீழேயும் அமைந்துள்ளன. சரிவுகளுக்கு இடையிலான தூரம் சுமார் 10 மீட்டர் ஆகும். மண் சரிவு ஏற்பட்டப் பகுதியில் கேன்வாஸ் விரிப்புகளை பொருத்துவது உட்பட ஆரம்ப ஆய்வு நடத்த பொதுப்பணித் துறை சம்பவ இடத்தில் உள்ளது என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
தீயணைப்புப் படையின் நடவடிக்கை மாலை 5.10 மணிக்கு முடிவடைந்ததாகவும் கண்காணிப்பு மற்றும் மேல் நடவடிக்கைகளை கவனிக்கும் பொறுப்பு காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மூன்று மணி நேர கன மழையால் பாயா தெருபோங்கில் நிலச்சரிவு
22 ஆகஸ்ட் 2025, 2:28 AM


