அலோர் ஸ்டார், ஆக. 21 - புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகம் வழியாக நேற்றிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற உண்மையான பயணிகள் அல்லாதவர்கள் என சந்தேகிக்கப்படும் 26 வெளிநாட்டினருக்கு நுழைவு மறுப்பு அறிவிப்புகள் (என்.பி.எம்.) வெளியிடப்பட்டன.
அனைத்து வெளிநாட்டினரும் 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 8(3) வது பிரிவின் கீழ் வருகையாளர்களாக நுழைவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததால் அவர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டதாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் (ஏ.கே.பி.எஸ்.) கட்டளை அதிகாரி முகமது நசாருடின் எம் நாசீர் கூறினார்.
அவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த 13 பெண்கள் மற்றும் ஒரு ஆடவர், ஏழு இந்திய ஆடவர்கள், நான்கு லாவோஸ் பெண்கள் மற்றும் ஒரு வியட்நாமிய பெண் ஆகியோர் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்களில் எட்டு ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர். அனைத்து நபர்களும் அதே நுழைவுப் பாதை வழியாக தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டார்கள் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
நுழைவு மறுப்பு நடவடிக்கை, துறையின் சுற்றறிக்கை விதிமுறைகளையும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
நிபந்தனையை பூர்த்தி செய்யாத அந்நியர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
21 ஆகஸ்ட் 2025, 10:06 AM


