ஜெருசலம், ஆக. 21 - பரவலாகக் கண்டிக்கப்பட்ட பாலஸ்தீனம் இஸ்ரேலிய குடியேற்றத் திட்டத்திற்கு அந்நாட்டு அரசிடமிருந்து இறுதி ஒப்புதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைப் பிரித்து கிழக்கு ஜெருசலேமிலிருந்து துண்டிக்கும் இ1 திட்டத்திற்கான ஒப்புதல் கடந்த வாரம் ஸ்மோட்ரிச்சால் அறிவிக்கப்பட்டது. மேலும் அது பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் ஆணையத்திடமிருந்து இறுதி ஒப்புதலைப் பெற்றது.
இந்தக் குடியேற்றத் திட்டத்தை மீண்டும் தொடங்குவது இஸ்ரேலை மேலும் தனிமைப்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது. காஸா போரின் திட்டமிடப்பட்ட விரிவாக்கத்தால் அதிருப்தியடைந்த சில மேற்கத்திய நட்பு நாடுகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவையில் பாலஸ்தீன நாட்டின் அந்தஸ்தை அங்கீகரிக்கக்கூடும் என்று அறிவித்துள்ளன.
இந்த இ1 அமலாக்கத்தின் வழி பல ஆண்டுகளாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நாங்கள் இறுதியாக நிறைவேற்றுகிறோம் என்று ஆளும் வலதுசாரி கூட்டணியின் தீவிர தேசியவாதியான ஸ்மோட்ரிச் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாலஸ்தீன அரசு வரைபடத்திலிருந்து அழிக்கப்படுகிறது. கோஷங்களால் அல்ல, செயல்களால் என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பை பாலஸ்தீன வெளியுறவு அமைச்சு வன்மையாகக் கண்டித்தது. இ1 குடியேற்றம் அந்தப் பகுதியில் வாழும் பாலஸ்தீன சமூகங்களைத் தனிமைப்படுத்தும் என்பதோடு இரு நாட்டுத் தீர்வுக்கான சாத்தியத்தையும் பாதிக்கும் என்று அது கூறியது.
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் அரசாங்க செய்தித் தொடர்பாளர், குடியேற்ற கட்டுமானம் அனைத்துலக சட்டத்தை மீறுவதோடு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் தீர்வு காண்பதையும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதையும் தடுக்கிறது என்றார்.
இ1 அறிவிப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


