கோலாலம்பூர், ஆக. 21- உலகின் நடப்புச் சவால்களை எதிர்கொள்வதில் கட்டொழுங்கு, தேச பக்தி மற்றும் தாங்கும் சக்தி கொண்ட இளைய தலைமுறையை வடிவமைப்பதில் ஒரு விவேக முன்னெடுப்பாக விளங்கும் தேசிய சேவை பயிற்சித் திட்டம் (பி.கே.எல்.என்.) தொடரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெறும் உடல் ரீதியான பயிற்சியை மட்டுமல்லாது இளைஞர்களிடையே தேசிய உணர்வையும் தற்காப்பு விழிப்புணர்வையும் வளர்ப்பதற்கான நாட்டின் நீண்டகால முதலீடாகும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.
சிக்கலான இன்றைய உலகில் தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு தேசிய மதிப்புக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வை வளர்ப்பது ஒரு முக்கியமான அடித்தளமாகும்.
ஆயினும், மலேசிய இளைஞர் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் 2015 முதல் 2019 வரையிலான மலேசிய இளைஞர் குறியீட்டு ஆய்வில் தேசபக்தி, தன்னார்வத் தொண்டு மற்றும் ஒற்றுமை உள்ளிட்ட இளைஞர் அடையாளக் களத்தில் மதிப்பெண்கள் சரிவு நிலையைக் காட்டியது என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் நேற்று தற்காப்பு அமைச்சின் 13வது மலேசியத் திட்ட தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்த போது அவர் இவ்வாறு கூறினார்.
பி.எல்.கே.என் 3.0 திட்டம் ரத்து செய்யப்பட்டு அத்திட்டத்திற்கான அனைத்து ஒதுக்கீடுகளும் மற்ற அமைச்சுகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற இண்ட்ரா மக்கோத்தா தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லாவின் பரிந்துரைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய சேவை பயிற்சித் திட்டம் 3.0 மீண்டும் அமல்படுத்தப்பட்டது முதல் மொத்தம் 40 பங்கேற்பாளர்கள் இளம் துணை ராணுவப் பயிற்சியிலும் 148 பங்கேற்பாளர்கள் பிரதேச இராணுவத்திலும் பங்கேற்றுள்ளனர்.
அடுத்த ஆண்டு தொடங்கி பி.எல்.கே.என் 3.0 பரவலாக செயல்படுத்தப்படுவதால் இந்த புள்ளிவிவரங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று முகமது காலிட் கூறினார்.
கட்டொழுங்கும் தேசப்பற்றும் கொண்ட தலைமுறையின் உருவாக்கத்திற்கு பி.கே.எல்.என். அவசியம்
21 ஆகஸ்ட் 2025, 1:47 AM


