கோத்தா பாரு, ஆக.20 - பாசீர் மாஸில் அமைந்துள்ள இடைநிலைப்பள்ளி மாணவர் ஒருவர் பகடிவதைக்கு ஆளானது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு அதே பள்ளியில் பயிலும் நான்காம் படிவ மாணவர்கள் ஆறு பேர் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவர்களைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவு பாசீர் மாஸ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டதாகப் பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி காமா அசுரல் முகமது கூறினார்.
பதினாறு வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் நேற்றிரவு தடுத்து வைக்கப்பட்டதாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு நிகழ்ந்துள்ளது. ஐந்து மாணவர்கள் தனது தலையில் குத்தி, முழங்கையால் அடித்து, முதுகில் உதைத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.
சந்தேக நபர்களில் ஒருவர் தாம் அணிந்திருந்த விளையாட்டு உடையை முட்டி வரை கழற்றினார் எனவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்டவருக்கு தலையில் வலி ஏற்பட்டதோடு சந்தேக நபர்களால் அடிக்கடி துன்புறுத்தப்பட்டதால் பள்ளிக்குச் செல்வதில் பெரும் அச்சத்தையும் எதிர்நோக்கினார் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர் தனது பெற்றோரிடம் இந்த இச்சம்பவம் குறித்து கூறியதைத் தொடர்ந்து இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆரம்ப விசாரணையில் பாதிக்கப்பட்டவரை துன்புறுத்தியதை அனைத்து சந்தேக நபர்களும் ஒப்புக்கொண்டனர் என்றார் அவர்.
பாசீர் மாஸில் பகடிவதை - ஆறு நான்காம் படிவ மாணவர்கள் கைது
20 ஆகஸ்ட் 2025, 9:13 AM