தாய்.-கம்போடிய எல்லையில் மலேசிய தற்காப்புத் தூதர் தலைமையில் பார்வையாளர் குழு ஆய்வு

20 ஆகஸ்ட் 2025, 6:32 AM
தாய்.-கம்போடிய எல்லையில் மலேசிய தற்காப்புத் தூதர் தலைமையில் பார்வையாளர் குழு ஆய்வு

பேங்காக், ஆக. 20 - தாய்லாந்து-கம்போடியா எல்லையில் தற்காலிகப் பார்வையாளர் குழுவை (ஐ.ஓ.டி.) வழிநடத்தும்  தாய்லாந்திற்கான மலேசியாவின் பாதுகாப்புத் தூதர்  பிரிகேடியர் ஜெனரல் சம்சுல் ரிசால் மூசா, போர்நிறுத்த அமலாக்கத்தை  கண்காணித்து அதன் செயல்முறை வெளிப்படையாகவும் பாரபட்சமற்றதாகவும் இருப்பதை உறுதி செய்து வருகிறார்.

அரச தாய். ஆயுதப்படைகள் ஏற்பாட்டில்  கடந்த திங்கள்கிழமை முதல் இன்று வரை
நடத்தப்பட்ட மூன்று நாள் ஆய்வில் உபோன் ரட்சதானி, சி சா கெட் மற்றும் சுரின் மாநிலங்கள் அடங்கியிருந்தன.

இந்த ஆய்வில் எட்டு ஆசியான் உறுப்பு நாடுகளான மலேசியா, புருணை, லாவோஸ், இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகியவற்றின் 14 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக  இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதற்கான வெளிப்படைத்தன்மையைப் பேணுவதில்
குழுவுக்கு உள்ள உறுதிப்பாட்டை சம்சுல் வலியுறுத்தினார்.

அண்மைய  மோதலின் மையப் புள்ளியாக இருந்த எல்லைப் பகுதிகளில் ஐ.ஓ.டி. நேரில் ஆய்வுகளை நடத்தியதாக அவர் கூறினார்.

இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதைக் கண்காணிப்பதும் வெளிப்படையான மற்றும் நியாயமான செயல்முறையை உறுதி செய்வதற்காக தகவல், தரவு, உண்மைகள் மற்றும் உள்ளீடுகளைச் சேகரித்து தொகுப்பதும் ஐ.ஓ.டி.யின் பணியாகும் என்று அவர் நேற்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

இதற்கிடையில், உபோன் ரட்சதானி மாநிலத்தில் உள்ள சன்பாசித்திபிரசோங் முகாம் மருத்துவமனையில் கள ஆய்வு தொடங்கிய வேளையில் அங்கு பார்வையாளர்களுக்கு சமீபத்திய சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக தாய்லாந்து அரச
ஆயுதப்படை தெரிவித்தது.

ஆசியான் பார்வையாளர்கள் தங்கள் வருகையின் போது எல்லையில் உள்ள முக்கிய இடங்களில் நேரில் ஆய்வுகளை மேற்கொண்டதாக அது ஓர்
அறிக்கையில் குறிப்பிட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.