கோலாலம்பூர், ஆக. 20 - பள்ளி மாணவர்களை ஆபத்தான முறையில் ஏற்றி, இறக்கிச் சென்ற பள்ளி வேன் ஓட்டுநர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐம்பத்தொன்பது வயதான அந்த நபர் மீது 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42 (1) வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் ஐந்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம் என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று மாலை 5.53 மணிக்கு தனது குழுவினரால் கண்டறியப்பட்ட 33 வினாடிகள் கொண்ட ஒரு காணொளியில் வேன் ஒன்று நகர்ந்தவாறு இரு பள்ளி மாணவர்களை இறக்கி, ஏற்றிச் செல்வதைக் காட்டும் காட்சிகள் பதிவாகியிருந்ததாக நாஸ்ரோன் கூறினார்.
அத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களுக்கும் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அகமது சஹ்ரைனை 017-3818422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் நாஸ்ரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாணவர்களை ஆபத்தான முறையில் ஏற்றி, இறக்கிய பள்ளி வேன் ஓட்டுநர் கைது
20 ஆகஸ்ட் 2025, 3:51 AM


