கிள்ளான், ஆக. 20 - இவ்வாண்டு மே மாதம் முதல் அந்நிய நாட்டினரை தருவிப்பதை நிறுத்துவது என அரசாங்கம் முடிவெடுத்தப் பின்னர் இந்நாட்டிலுள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிக்கு உதவும் கடப்பாட்டை சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை கொண்டுள்ளது.
அந்நியத் தொழிலாளர்கள் நாட்டின் சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் மீறாதிருப்பதை உறுதி செய்வதில் தமது தரப்பு தற்போது தீவிரம் காட்டி வருவதாக கைருள் அமினுஸ் கமாருடின் கூறினார்.
எனக்குத் தெரிந்த வரை புதிதாக தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதில்லை. தற்போது உள்ள எண்ணிக்கை குறிப்பாக, சிலாங்கூரில் போதுமான அளவு உள்ளது. மாநிலத்தில் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தும் உளவு நடவடிக்கை, பொது மக்கள் வழங்கும் தகவல் உள்ளிட்ட பல்வேறு அணுகுமுறைகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான அந்நிய நாட்டினர் சட்டப்பூர்வமான முறையில் நாட்டிற்குள் நுழைந்தது சோதனைகளில் கண்டறியப்பட்டது. எனினும், வேலை பெர்மிடத் தொடர்பான விதிமுறை மீறல்கள் காரணமாக அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் நேற்று மேரு பகுதியில் நடைபெற்ற ஓப் மாஹிர் நடவடிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறையின் 17 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுடன் மேரு தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள அலுமினிய பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் அமினுஸ் சோதனை மேற்கொண்டார்.
இந்த சோதனையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 43 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 34 பேர் அத்தொழிற்சாலையில் பணி வருகை அட்டையைக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அங்கு முழு நேரத் தொழிலாளர்களாக வேலை செய்ததற்கு இதுவே ஆதாரமாக உள்ளது என்றார் அவர்.


