ஜோர்ஜ் டவுன், ஆக 20 - இங்குள்ள ஜாலான் மெக்காலிஸ்டரில் கார் ஒன்றில் அம்பு பாய்ந்த சம்பவம் குறித்து தங்களுக்கு புகார் கிடைத்துள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட காரின் ஓட்டுநரான 57 வயது உள்ளூர் ஆடவர் போலீசில் புகார் செய்துள்ளதாக தீமோர் லாவுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முகமது கூறினார்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 13ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
புகார்தாரர் ஆயர் ஹீத்தாமிலிருந்து ஜாலான் பங்கோர் நோக்கி ஜாலான் மெக்காலிஸ்டர் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது அம்பு எய்தல் பயிற்சி நடவடிக்கை பகுதியிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு அம்பு அவரது காரின் வலது பின்புற கதவில் பாய்ந்தது என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் ஏற்பாட்டில் ஜாலான் மெக்காலிஸ்டருக்கு அடுத்த பள்ளி மைதானத்தில் அம்பு எய்தல் பயிற்சி நடைபெறுவது சோதனையில் கண்டறியப்பட்டதாகவும் இது குறித்து புகார் பதிவான பிறகு ஆகஸ்ட் 14ஆம் தேதி அப்பயிற்சி நிறுத்தப்பட்டதாகவும் அப்துல் ரோசாக் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பினாங்கு மாநில கல்வித் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சாலையில் செல்லும் போது தனது காரில் அம்பு சிக்கிக் கொண்டதைக் கண்டு கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்ததைச் சித்தரிக்கும் 51 வினாடி காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


