கோலாலம்பூர், ஆக. 19 - சுயமாக செயல்படுவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்.ஏ.சி.சி.) அனுமதி வழங்கப்பட்ட காரணத்தால் மலேசிய அரசு நிறுவனங்களின் ஊழல் மற்றும் உளவு இரகசியங்கள் கசிவு தொடர்பான விஷயங்கள் இப்போது அம்பலமாகி வருகின்றன.
மலேசிய ஆயுதப்படை மற்றும் இதர அரசு துறைகளில் உள் அச்சுறுத்தல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் நீண்ட காலமாக இருந்தாலும் கடுமையான அமலாக்க முயற்சிகள் மூலம் அவை இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த விஷயம் 2020ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்டு விட்டது. ஏன் இப்போதுதான் அம்பலத்திற்கு வருகிறது என்று கேட்டால், நடவடிக்கை எடுப்பதற்குரிய முழு அதிகாரத்தை நாங்கள் இப்போதுதான் எம்.ஏ.சி.சி.க்கு வழங்கிள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
பழைய வழக்குகள் முன்பு தாமதமடைந்தன. சில வழக்குகள் மூடி மறைக்கப்பட்டன. அல்லது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. இப்போது நாங்கள் மறு ஆய்வு செய்து விசாரிக்கிறோம். ஆதாரம் இருந்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். ஏன் இப்போது? என்பதுதான் கேள்வியாக உள்ளது. காரணம் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம். மூடி மறைக்கவில்லை.
2020ஆம் ஆண்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஏன் அம்பலப்படுத்த தவறினீர்கள் என்று அப்போது இருந்த தலைமைத்துவத்தை கேளுங்கள் என அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என வலியுத்திய அன்வார், ஆதாரம் இருக்கும் பட்சத்தில் பாண்டான் எம்.பி. ரபிஸ் ரம்லி மகன் மீதான தாக்குதல் அல்லது ஸாரா கைரினா மரணம் உள்ளிட்ட அனைத்து வழக்குகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தற்காப்பு அமைச்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ட்ரோன்களைப் பறக்கவிட்டதற்காக இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டது மற்றும் ஆயுதப்படையின் மூத்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு அத்துமீறல்கள் தொடர்பில் நாடாளுன்றத்தில் இன்று பாசீர் மாஸ் உறுப்பினர் அகமது பாட்லி ஷஹாரி எழுப்பிய கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.