ஷா ஆலம், ஆகஸ்ட் 19: பெலாங்கி செமினியில் RM52 மில்லியன் மதிப்பிலான மேம்பாலம் கட்டப்படும். இது ஜாலான் செமினியை பெலாங்கி செமினிவுடன் இணைக்கும்.
நீண்ட காலமாக சாலைப் பயனாளர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கும் பண்டார் தாசிக் கெசுமா, பண்டார் ரிஞ்சிங் மற்றும் எகோ ஃபோரெஸ்ட் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று டுசுன் துவாவின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹன் அப்துல் அஜீஸ் கூறினார்.
“பெரானாங் மற்றும் ஜாலான் ப்ரோகா பகுதிகளில் கிட்டத்தட்ட 10 டெவலப்பர்களால் பெரிய அளவிலான மேம்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நேற்று குறிப்பிட்ட நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் மூலம் இந்த மேம்பாலம் கட்டுவதை காஜாங் நகராண்மை கழகம் ஒருங்கிணைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.
செமினி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் டத்தோ ஜோஹன், கட்டுமானச் செலவை முழுவதுமாக டெவலப்பர் ஏற்பார் மற்றும் இத்திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவடையும் என்று அறிவித்தார்.
“இந்த மேம்பாலம் மூலம், போக்குவரத்து ஓட்டம் மிகவும் சீராக இருப்பதை உறுதி செய்ய முடியும். அங்கு சுற்றியுள்ள மக்களுக்கு குறிப்பாக பெரனாங் மற்றும் செமினியில் வசிப்பவர்களுக்கு நீண்டகால நன்மைகளை வழங்க முடியும். மேலும், மக்களின் நல்வாழ்வுக்காக இந்தத் திட்டம் சீராக இயங்கும் என்று நம்புகிறோம்,” என அவர் கூறினார்.


