கோலாலம்பூர், ஆக. 19 - நாடாளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) அல்லது பிற நிறுவனங்கள் மூலம் சமூகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை முழுமையாக முன்னெடுப்பதில் அரசாங்கம் செலுத்தி வரும் கவனம் குறித்து சுங்கை சிப்புட் தொகுதி பக்கத்தான் உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார்.
பிரதமர் தனது பதிலில் கடந்த 2024ன் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியனில் 98.9 மில்லியன் வெள்ளிகள் 122 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்த பதிலின் வழி நிதி ஒதுக்கப்படவில்லை, உதவவில்லை, காலதாமதமாகிறது என்று அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதே வேளையில் மற்ற அமைப்பு அல்லது உதவி திட்டங்கள் வழியும் இந்தியர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார். துனாய் ரஹ்மா திட்டத்தின் வழி கடந்த 2022 ம் ஆண்டு இந்தியர்களுக்கு 500 மில்லியனுக்கு மேல் வழங்க பட்டுள்ள நிலையில் 2025 ம் ஆண்டு 972 மில்லியனுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அதே போல் 1200 மில்லியனுக்கு மேல் வீட்டு கடனுக்கான அரசாங்க உத்ரவாதம் வழங்கப் பட்டுள்ளது. அவை அனைத்தும் இந்திய சமுதாயத்தின் உயர்வில் மடாணி அரசு அக்கறை கொண்டிருப்பதால் வழங்கப்படுகிறது என அவர் தெளிவுபடுத்தினார்.
நாட்டில் சிலர் தங்கள் சுய அரசியல் லாபத்திற்காக மித்ரா திட்டத்தின் வழி மட்டுமே இந்தியர்களுக்கு உதவி வழங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்க பாடுபடுகிறார்கள். அவர்களின் அரசியல் விளையாட்டுகளில் சிக்கி இந்தியர்கள் பலியாகி விடக்கூடாது என சமுதாயம் கேட்டுக்கொள்ளப் படுகிறது.



