அலோர் ஸ்டார், ஆக. 18 - வருகையாளர்களாக நாட்டிற்குள் நுழைவதற்கு தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய எட்டு வெளிநாட்டினருக்கு எதிராக நுழைவு மறுப்பு அறிவிப்பை (என்.பி.எம்.) மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்.) வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட எட்டு பேர் புக்கிட் காயு ஹீத்தாமில் உள்ள எல்லை நுழைவாயில் வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றதாக ஏ.கே.பி.எஸ். அறிக்கை ஒன்றில் கூறியது.
ஐந்து ஆடவர்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 8(3) வது விதிகளின்படி என் பி.எம். வழங்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் ஒரே நுழைவுப் பாதை வழியாக தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிராகரிப்பு செயல்முறை சீரான செயலாக்க நடைமுறைகள் (எஸ் ஒ.பி.) மற்றும் நடைமுறையில் உள்ள துறை சுற்றறிக்கையின்படி மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் எந்த விதமான பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும் குற்றவியல் கூறுகளோ அல்லது அமலாக்க விசாரணையோ மேற்கொள்ளப்படவில்லை.
நுழைவு நிபந்தனைகளை பின்பற்றத் தவறிய எண்மர் நாட்டிற்குள் நுழையத் தடை
18 ஆகஸ்ட் 2025, 7:49 AM


