ஷா ஆலம், ஆக 18 - பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தால் (எம்.பி.பி.ஜே.) அமல்படுத்தப்படும்
இரண்டு முக்கிய திட்டங்கள் வாயிலாகப் பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்கள் சிறந்த வெள்ளப் பாதுகாப்பு மற்றும் புதிய பொழுதுபோக்கு வசதிகளை பெறவுள்ளனர்.
ஜாலான் 21/9 பகுதியில் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த சிறிய நிலச்சரிவுகள் காரணமாக வீடுகள் சேதத்தை எதிர்நோக்கிய நிலையில் சீ பார்க்கில் மேற்கொள்ளப்பட்ட 53 லட்சம் வெள்ளி மதிப்பிலான வடிகால் மேம்பட்டுத் திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 16 மாத கால திட்டம் மலைச்சரிவை உறுதிப்படுத்தி வடிகால் வசதியை மேம்படுத்தவும் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்புடன்கூடிய 525 மீட்டர் பாதசாரி நடைபாதையை உருவாக்கவும் உதவியுள்ளது என்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் கூறினார்.
ஜாலான் 21/9 பகுதியில் வடிகால் ஓரங்களில் சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இறுதியாக கடந்த 2022 மார்ச் மாதம் இத்தகையச் சம்பவம் நடந்தது.
இந்த சம்பவங்கள் நிகழ்ந்தவுடன் மாநகர் மன்றம் அவற்றை உடனடியாக சரிசெய்தாலும் மக்களின் பாதுகாப்பு கருதி நீண்டகால தீர்வைத் தொடர வேண்டியது அவசியம் என்று எங்கள் அலுவலகம் உணர்ந்தது என்று அவர் அந்த ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இதற்கிடையில், எஸ்.எஸ்.7 கிளானா ஜெயாவில் அரசாங்க-தனியார் ஒத்துழைப்பின் கீழ் பயன்படுத்தப்படாத ஃபுட்சால் மைதானத்தை 800,000 வெள்ளி செலவில் பிக்கல்பால் மற்றும் பெடல் விளையாட்டு மைதானமாக மாற்றும் நடவடிக்கையும் மேற்கொளளபட்டது என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின்படி தனியார் நிறுவனம் ஒன்று இந்த மைதானத்தை நிர்மாணித்து 21 ஆண்டுகளுக்கு நடத்தும் என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது ஜஹ்ரி சமிங்கன் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயாவில் கால்வாய் சீரமைப்பு, விளையாட்டு திடல் நிர்மாணிப்பு
18 ஆகஸ்ட் 2025, 5:08 AM